அருள் மிகு சபரிமலை ஐய்யப்பன்

முழுமுதற் பொருளான சிவபெருமான் தன் பல்வேறு சக்திகளுக்கூடாக உலக மக்களை இளைப்பாறும் பொருட்டும், வையத்துள் வாழ்வாங்கு வாழவும் வழிகாட்டியுள்ளமையை புராண, இதிகாசங்களும், இலக்கியங்களும் எமக்கு எடுத்தியம்புகின்றன. சிவபெருமானே உமையை சக்தியாகக் கொண்டு விநாயகப்பெருமான், முருகப் பெருமான் ஆகிய திருக்குமாரர்களை தம் புத்திரர்களாகக் கொண்டு அருள் மிகு அற்புதங்களை விளக்கி இல்லறப்பொருளை யும், உணர்த்தியுள்ளார். சிவன் உமை, விநாயகர், முருகன் வழிபாடு நம் வாழ்வோடு இரண்டறக்கலந்ததாகும்.
அருள்மிகு சபரிமலை ஐயப்பனும் சிவனின் திருக்குமாரர்களில் ஒருவரேயாவார். இன்று இந்துக்களிடையே சபரி மலை ஐய்யப்பனின் வழிபாடும், வருடந்தோறும் சபரிமலை யாத்திரையும் நடைபெறுவதுடன், பக்தர்கள் நோன்பிருந்து ஆசாராத்துடன் பூஜைகள் செய்து, அன்னதானம் வழங்கி “சாமியே சரணம் ஐய்யப்பா’ என்று பாடித்துதித்து, பஜனைகள், கூட்டுப் பிரார்த்தனைகள் செய்து சபரிமலை யாத்திரையை மேற்கொள்கின்றனர்.
சபரிமலை

சபரி என்ற வேடகுலப் பெண்; வேட்டையாடிப் புலால் உண்ணும் தன் இனத்தவரை வெறுத்து மாதங்க வனம் எனும் வனத்தில் துறவியாக வாழ்க்கை நடத்தினாள். இவ்வனத்தில் ஆச்சிரமம் அமைத்து தன் சிஷ்யர்களுடன் தவம் இயற்றிய மாதங்க முனிவருக்கும் அவருடைய சிஷ்யர்களுக்கும் பல்வேறு உதவிகளைச் செய்து அருந் தொன்றாற்றினாள்.
மாதங்க முனிவர் தனது இறுதிகாலத்தில் சபரியை நோக்கி “சபரி நீ இப்பிறப்பில்’ வேடுவக் குலப்பெண்ணாய் பிறந்தாய் எனினும் பல நற்கருமங்களை புரிந்தாய். ஸ்ரீ இராமர் இந்த ஆச்சிரமத்திற்கு வருவார். அவர் உனக்கு அருள்புரிவார். நீ நற்கதி பெறுவாய்” என்று கூறினார்.
முனிவர் கூறியபடியே சீதாபிராட்டியைத் தேடிவந்த இராம, இலக்குமணர்கள் சபரி மலைக்கு வந்தனர். சபரிமலை காட்டில் கிடைத்த கிழங்கு, கனி வகைகளில் முதலில் சுவைத்துப் பார்த்து, அவற்றில் இனியவைகளை மட்டுமே தெரிந்து இராம, இலக்குமணரிடம் சமர்ப்பித்து சபரி வணங்கினாள். இராமபிரானின் பரிபூரண அருள் சபரிக்குக் கிடைத்தது.
பம்பாநதி தீரத்தில் வாழ்ந்த சபரியைப் பற்றி பின்வரும் தகவலும் வழக்கிலுள்ளது. ஒருமுறை சில முனிவர்கள் சபரியை தம் காலால் உதைத்ததால் பம்பாநதி முழுவதும் பருக உதவாதவாறு கெட்டது. இராமபிரானை தரிசித்து அவர் பாதம் வணங்கி நின்ற சபரியை நோக்கி இராமபிரான் “அம்மா அடியேன் உனக்கு என்ன வரம் அளிக்க வேண்டும்? என்று கேட்க, அதற்கு சபரி, தேவரீர் பம்பாநதி முழுவதும் பருக உதவாது அசுத்தமடைந்துள்ளது. அதனை மீண்டும் தூய்மைப்படுத்தி நன்னீராக மாற்றி அருள வேண்டும் என்றாள்”
இராமபிரான் தாயே, இதற்கு ஏன் நான் வரம் கொடுக்க வேண்டும்? உன் பாத தூளியே பம்பையை தூய்மையாக்கி விடாதா? பம்பையில் அது தூய்மையாகிவிட வேண்டும் என்று பிரார்த்தித்தபடியே நீராடி வரும்படி திருவாய்மலர்ந்தருளினார். கருணைக்கடல் இராமபிரானின் எண்ணப்படி சபரியும் நீராட பம்மைநதியும் சகல தோஷகங்களும் நீங்கி தூய்மையடைந்தது. பம்பையில் நீராடி பக்தர்கள் தூய்மையடைகின்றனர். அன்னை சபரி அன்பின் வடிவம். அவள் இருந்தும் நடந்தும், உலாவிய பகுதி அழகிய சபரிமலையின் சிகரம். எழில் மிகு அந்த கொடுமுடியிலேதான் தருமசாஸ்தா ஐயப்பனாக வீற்றிருந்து அருள்புரிகின்றார். இதயத்தை பரம்பொருளில் ஏற்றி இராமபிரானை துதித்த வண்ணமே யோக சமாதியில் மூழ்கி சபரி வீடு பேறு பெற்றார். இது நடந்தது திரேதா யுகத்தில் சபரியின் வரலாறு கலியுகத்திலும் தொடருகின்றது. புராணத்தில் இதற்கு, சபரிக்கு சாயுச்சிய முக்தி கிடைக்காததால் மீண்டும் பிறவியெடுத்து வீரமணிகண்டனை இடைவிடாது வணங்கி அப்பேறு பெற்றார் என்று விளக்கப்பட்டுள்ளது.
பூவுலகில் மணிகண்டன்

ஒருசமயம் பூவுலகில் சத்துவகுணம் குறைந்து லோபம் அதிகரித்தது. பக்தி மார்க்கங்கள் மங்கி மறையத்துவங்கின. பாவ காரியங்கள் தலைவிரித்தாடின. வேதவிதிப்படி நடக்க வேண்டிய நித்திய தருமங்கள் சரிவர நடக்கத்தவறின. தரும சிந்தனைகள், நீதி, நெறிகள் நிலை குலைந்தன. இதனால் இலட்சுமி கடாட்சம் அற்றது. அறநெறிகள் அற்றன. யாகங்கள் நடைபெறவில்லை. பக்த மார்க்கங்கள் குன்றின.
இதனை அறிந்த மும்மூர்த்திகளும் இந்நிலையை மாற்ற தங்கள் அம்சமான தேவமகனை பூலோகத்திற்கு அனுப்பினர். திருமகளும், மலைமகளும், அலைமகளும் தங்கள் அம்சமான ஒரு தேவமகனை பூலோகத்திற்கு அனுப்பிவைத்தனர். தருமமும் சத்தியமும் முன்கேபால் நிலைக்க மும்மூர்த்திகள் அனுப்பிவைத்த தேவமகன் தக்தன் என்னும் நாமத்துடன் அருமறைகளைக்கற்று, காத்து, பூவுலகில் தருமத்தையும், சத்தியத்தையும் நிலைநாட்டிக் கொண்டிருந்தான்.
முப்பெரும் தேவியரும் அனுப்பிவைத்த தேவமகள் காலவன் என்ற முனிவருக்கு மகளாகப் பிறந்து லீலா என்னும் பெயரில் வளர்ந்தாள். இறைவன் அருளால் தத்தனுக்கும், லீலாவுக்கும் திருமணம் நடந்தேறியது. தத்தன் பேரின்ப முக்தியை அடைய விழைந்து தவம் இயற்றி னான். அவன் சிற்றின்பத்தி லும் இல்லறத்திலும் நாட்டம் கொள்ள வில்லை. லீலாவோ இதற்கு முற்றிலும் மாறுபட்ட வளாக விளங்கினாள். முனிவரின் மகளாகப் பிறந்த அவள் சிற்றின்ப வேட்கையையே பெரிதாக மதித்து தத்தனை மாற்ற முயற்சித்ததால் லீலாவை மஹிஷ முகத்தோடு அலைந்து திரிவாய் என சாபம் இட்டான். லீலாவும் எதிர்சாபமிட்டு அவனை ஆன் மஹிஷமாக பிறந்து தன்னை அடையும்படி சபித்தாள். இருவருடைய சாபமும் பலிக்கத் தொடங்கின.
கரம்பன் என்ற அரக்கனுக்கு மகளாக மஹிஷ முகத்தோடு லீலா உதித்தாள். அவளுக்கு கரம்பிகை என்ற நாமம் இடப்பட்டது. கரம்பிகையான மஹிஷமுகி தன் தமயனாகிய மஹிஷாசுரனை கொல்ல மும்மூர்த்திகள் தம் அம்சங்களை ஒன்று சேர்ந்து சண்டிகாதேவியை அனுப்பி, சிங்கவாகனத்தில் எழுந்தருளி சக்கராயுதத்தினால் மஹிஷாசுரணைக் கொன்ற பலியை தீர்த்துக்கொள்ள, பிரம்மனை எண்ணி கடுந்தவம் புரிந்து சிவபெருமானுக்கும், விஷ்ணுபெருமானுக்கும் அம்சமாகத் தோன்றும் திவ்விய சக்தி மிக்க ஒரு பாலகனால்தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டுமென்றும், அப்பாலகன் பூவுலகில் ஒரு மானுடனுக்கு பன்னிரெண்டு ஆண்டுகாலம் சேவகம் செய்வதவனாகவும் இருக்க வேண்டுமென வரம் பெற்றாள்.
பிரம்மனிடம் வரம் பெற்ற மஹிஷமுகி தேவர்களை அடக்கி ஒடுக்க புறப்பட்டாள். இவ்வேளையில் பரமசிவனின் ஆணைப்படி தத்தன் சுந்தர மஹிஷமாக பூலோகத்தில் தோன்றி மஹிஷமுகியை கலந்து பாதாளலோகத்தில் வாழத் தொடங்கினான்.
மஹிஷமுகியைப் பற்றிய பயம் தேவர்களை வாட்டி வதைத்தது. மும்மூர்த்திகளின் சக்தியால் தோன்றிய மஹிஷமுகியை அழிப்பது இலகுவானதல்ல என்று பயந்து நடுங்கினர். தேவர்களின் அச்சத்தை உணர்ந்த தேவகுருவான பிரஹஸ்பதி மஹிஷமுகியை அழிப்பதற்கு ஒரு உபாயத்தைக் கூறினார்.
(தொடர் அடுத்த வாரம்)
சிவபெருமான் சூரனை அழிக்க ஆறுமுகப் பெருமானை தோன்றச் செய்தது போல், இம்மஹிஷமுகியையும் அழிக்க ஒரு பாலகனை உங்களுக்கு அருளுவார் என்று உபதேசித்தார். தேவகுருவின் அருள்வாக்கினை கேட்டுத்தெளிந்த தேவர்கள் நமச்சிவாய மந்திரத்தை ஓதியபடி திருக்கைலாயத்தை அடைந்து ஈசனின் திருக்கோயில் வாயிலில் உடைவாழும், பொற்பிரம்பும் ஏந்தி காவல்புரியும் நந்திதேவரை வணங்கி அனுமதி பெற்று திருக்கோயிலுனுட் சென்று பவளமலையைப் போன்ற ஈசுவரனையும், நீலக்கொடி போன்ற பார்வதிதேவியையும் கண்டு வணங்கி ஈஸ்வரா, பாதாள லோகத்தில் சுந்தர மாஹிஷத்துடன் கூடியிருக்கும் மஹிஷமுகியை சம்ஹாரம் செய்ய தேவரீர் திருமாலின் அம்சத்தோடு கூடிய ஹரிஹரசுதனை, தாரகபிரம்ம சொரூபனை அவதரிக்கச் செய்து அருள் புரிதல் வேண்டும் என்று பணித்தனர்.
தேவர்களே வருந்தாதீர், உங்கள் எண்ணம் நிறைவேறும். மஹிஷமுகியின் அந்திமகாலம் நெருங்கிவிட்டது. ஸ்ரீமத் நாராயணனின் சாத்வீக குணமும், எமது சாமச குணமும் அமையப்பெற்ற அற்புதப்புதல்வன் உதிப்பான். அவன் பூவுலகில் பந்தள நாட்டில் பன்னிரெண்டு ஆண்டுகாலம் வளர்ந்து மஹிஷமுகியை சம்ஹாரம் செய்து உங்களை காப்பாற்றுவ்¡ன், என்று திருவாய் மலர்ந்தருளினார். கைலாசபதியின் அமுத மொழி கேட்ட அமரர்கள் முக்கண்ணனின் திருநோக்கில் மகிழ்ந்து ஆலகாலவிடமுண்டு நீலகண்ட தேவனை வாழ்த்தி விடைபெற்றனர்.
ஹரிஹரசுதன் மணிகண்டன்
தேவர்களும்,அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக திருப்பாற்கடலில் சகல மூலிகைகளையும், கரைத்து, மந்திரமலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்ற சர்ப்பத்தை கயிராகச் சுற்றினர். திருமாலின் தந்திரப்படி சர்ப்பத்தின் வாலை தேவர்களும், தலைப்பகுதியை அசுரர்களும் பிடித்துக் கொண்டு திருப்பாற்கடலை கடையத் தொடங்கினர்.
சர்ப்பத்தின் விஷாக்கினி ஜுவாலையுடன் கூடிய பெரும் மூச்சுக் காற்றினால் அசுரர்கள் பலம் குறைந்து அல்லலுற்றனர். சர்ப்பத்தின் சுவாச வேகத்தினால் மேகங்கள் வால் பக்கம் ஒன்று திரண்டு மழை பொழிந்தன. இதனால் தேவர்கள் களைப்பு நீங்கி பலம் பெற்றனர். இவ்வேளையில் ஸ்ரீமத்நாராயணன் மந்திரமலைக்கு ஆதாரமாக நிற்க கூர்ம அவதாரம் எடுத்தருளினார்.
இவ்வாறு தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது திருப்பாற்கடலிலிருந்து காமதேனு, பாரிஜாத விருக்ஷம், அப்சரங்கள், சந்திரன் தோன்றினர். அத்தோடு ஆலகால விஷமும் வந்தது. அதை சிவபெருமான் உண்டு. தேவர்களைக் காத்தார். கண்டம்வரையே ஆலகால விஷம் இறங்கியது. ஈசன் திருநீலகண்டரானார்.
தன்வந்திரி என்ற தேவன் முத்துமாலைகளும், மலர்மாலைகளும் அணி செய்ய வெண்மையான ஆடையுடன் அமிர்த கலசத்துடன் திருப்பாற்கடலில் தோன்றினான். இத்தருணத்தில் மகாவிஷ்ணுவின் திருமார்பில் இலட்சுமி எழுந்தருளினார். தேவர்கள் பெருமைனையும், இலட்சுமியையும் துதித்து திருவருளைப் பெற்றனர். அரக்கர்களே ஆனவத்தால் பெருமானைப் பிரார்த்திக்கத் தவறி இலட்சுமி கடாட்ஷத்தை இழந்தனர். அவர்கள் பெரும் வேட்கையுடன் தன்வந்திரியின் கரங்களிலிருக்கும் அமிர்தத்தையே நோக்கிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவகையில் தன்வந்திரியின் மீது பாய்ந்து அமிர்த்த கலசத்தை அபகரித்துக் கொண்டனர். தேவர்கள் திளைகத்தனர். திருமாலைத் துதித்தனர்.
திருமால் தனது அம்சத்தைக்யெல்லாம் ஒன்று சேர்த்து ரூபலாவன்யத்தோடு கூடிய மோகினிப்பெண்ணாகத் தோன்றச் செய்தார். மோகினியின் அழகு வதனத்தைக் கண்டு மதிமயங்கிய அசுரர்கள் மோகினியையே பார்த்து மதியிலிழுந்து நின்றனர். அந்த மயக்கத்தில் நிலைதடுமாறி, மனம்மாறி கையிலிருந்த அமிர்தகலசத்தை மோகினியிடம் கொடுத்தனர்.
மோகினியின் அழகு அவர்களை கிரங்கச் செய்தது. மோகினியை அடைவது நானா, நீயா என்று தம்மிடையே போட்டி போட்டுக்கொண்டு சண்டை செய்தனர். அவர்களிடையே பெரும் கலவரம் மூண்டது. இச்சண்டையை பயன்படுத்திக்கொண்ட மோகினி தேவர்களுக்கு அமிர்தத்தை பகிர்ந்தளிக்களானாள்.
இவ்வேளையில் ராகுவும், கேதுவும், தேவர்கள் போல் மாறுவேடம் பூண்டு, தேவர்களோடு சேர்ந்து அமிர்ந்ததைப் பெற்று வாயில் போட்டனர். அவர்கள் தேவர்கள் போல் மந்திரத்தைச் சொல்லி உண்ணாமல் வாயில் போட்டதைக் கண்ட சூரியனும், சந்திரனும் அடையாளம் காண்பித்தனர். மோகினி மத்தால் அவர்கள் தலையில் அடித்தாள், இந்த அடியால் அவர்களது தலை வேறு, முண்டம் வேறாகியது. அமிர்தம் அவர்கள் வாயிலிருந்தபடியால் உயிர் தப்பினர். அன்று முதல் ராகுவும், கேதுவும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் நிலையான பகைவர்களாகி அவர்களை கிரகணமாக பிடிக்கின்றனர்.
ஸ்ரீமத் நாராயணனின் அம்சமான மோகினி அமிர்தம் அளித்து அமரர்களைக் காந்த மோகினியின் திருவுள்ளத்தில் லோகத்தில் சத்தியத்தையும், தர்மத்தையும் காக்க ஒரு திரு குமரனைத் தோன்றச் செய்ய வேண்டும் என்ற சிருஷ்டி பரிபாலன சிந்தனையும் எழுந்தது.
கட்டழகோடு விளங்கிய மோகினி காற்சிலம்புகளும், கைவளையல்களும் கலீர் கZர் என்று ஒலிக்க, புன்முறுவல் பூத்த வதனத்துடன் அன்ன நடைநடந்து அழகு மயில் போன்ற தோற்றத்துடன் நாணிக் கோணி நின்றாள். இவ்வாறு மோகினி அழகு தேவதையாக எழுந்து அற்புதத்திருவிளையாடல் இயற்றவிருக்கும் உள்ளக்கிடக்கை உமையொரு பாகனும் உணர்ந்தார். மஹிஷமுகியை சம்ஹாரம் செய்ய ஒரு பாலனை உற்பத்தியாக்கும் காலம் உருவாகிவிட்டது. சக்தி சொருபம் ஜனிக்க வேண்டும் என்ற இச்சை எழுந்தது.
மங்களம் பொங்கும் மார்கழித்திங்கள் உத்திராட நட்சத்திரம், விருட்சிக லக்னம், பஞ்சமி திதி சனிக்கிழமை நாள் மகேசனும், மோகினியும் நாவல தீவு என்றும் இடத்தில் சாலமற தண்நிழழில் எழுந்தருளினார். இவர்களின் சத்தியால் கண்டகி என்னும் நதி உற்பத்தியானது. அந்நீரில் வச்சிரதந்தி என்னும் புழுக்கள் பொன் வண்ணமயமாகத் தோன்றியது. அப்புழுக்கள் ஆற்றின் மண்ணுள் கூடுகட்டிப் பலகாலம் வாழும். பின்னர் அக்கூட்டினுள் இறக்கும். அவைகள் தாம் சாளிக்கிராமம். இவற்றில் காணப்படும்ஆழக்குறிகளைக் கொண்டு சிவ, விஷ்ணு சாளக்கிராமங்களைக் கண்டறியலாம்.
“இதன் அடிப்படையிலேயே “குளத்துப்புழை என்னும் திருத்தலத்தில் ஐயப்பன் குளத்தூர் ஐயன் என்ற பாலசாஸ்தா சாளக்கிராம வடிவில் காட்சி தருகிறார்.
சாளக்கிராம பூஜைசெய்து பூவுலகம் உய்ய வழி செய்ய சிவனும் விஷ்ணுவும் உலகைக் காக்க ஐயப்பனை அத்தருணத்தில் அவதரிக்கச் செய்தனர்.
ருத்ர சொரூபனான அரணும் மோகினி சொரூபனான தெரியும் ஹரி ஹர அம் சத்தை திவ்விய மங்கள தேஜோ ரூபியாய் ஆயிரம் சூரியன் உதிதாற் போன்ற பிரகாசம் பொருந்திய அழகிய குழந்தை வடிவமாய் தோன்றச் செய்தனர்.
கரிய நிறம், பவளம் போன்ற செக்கச் சிவந்த சடை, தாமரை மலர்ந்தாற் போன்ற மந்தஹா சம், மலரும் வதனம் பரந்த மார்பு,அதுணி மணிகள் ஜொலிக்கும் சங்கு போன்ற கண்டம், உபவீதம் அணிந்த தோள் செண்டு என்னும் ஆயுதம் கொண்ட திமுக்கரம் தாங்கப் பெற்று அவதரித்தார். அரனும் அனந்தனுமான திய்விய சொரூபத்தின் சக்தி வடிவானதும், ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேதவடிவாகிய ஸ்ரீ விஷ்ணுவின் சக்தி ஜயப்ப சக்தியாகி பேரொளியோடு பிரகாசித்தது.
இங்கனம் ஹரிஹரசுதன் அவதாரம் செய்ததும் மூவுலகும் வியந்து போற்றி கொண்டாடின. அருந்தபசியர்க்கு நன்நிமித்தங்கழும், அசுரர்களுக்கு தீய நிமித்தங்களும் தோன்றின.
மோகினி, பாலகனை திருக்கரங்களில் ஏந்தி பரம சிவனிடம் கொடுத்தார். ஈசன் பெருங்கருணையுடன் அணைத்து மகிழ்ந்தார். மோகினி அந்தர்த்தான மானாள்.
நான்முகன்; அக்குழந்தை சர்வ பூத தயாபரராகி - சமஸ்த லோகங்களையும் காத்தருளும் நாராயணனுக்கும், சர்வ பூதரட்சகராகிய சிவ பெருமானுக்கும் தோன்றிய தால் பூத நாதன் என்றும் திருமாலைப் போல் யுகங்கள் தோறும் அதர்மத்தை அழித்துத்தர்மத்தைக் காக்க அவதரித்த குழந்தை என்பதால் தர்ம சாஸ்வதாய என்றும் ஆர்ய தாதா என்றும் பற்பல திரு நாமங்களை சூட்டி மகிழ்ந்தனர்.
ஈசனும் ஈசுவரியும் குழந்தையை எடுத்துக் கொண்டு இடப வாகனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்தனர்” சுவாமியே சரணம் ஜயப்பா என்று ஈரேழு லோகங்களும் வெற்றி முழக்கமிட்டனர்.
மோகினி குமாரனான ஐயப்பன் சிவக் கோயிலில் பரம சிவனோடும்பார்வதியோடும் எழுந்தருளி ஆனைமுகப் பெருமானோடும் ஆறுமுகப் பெருமானோடும் பூத கண நாதர்களோடும் பற்பல திருவிளையாடல் களை புரிந்து வரும் நாளில் ஈசன் அமரர்களின் விண்ணப்பத்தை ஏற்று ஐயப்பனை அழைத்து அவரது அவதாரத்தின் காரணத்தையும் காரியத்தையும் திருவாய் மலர்ந்தருளினார்.
பூவுலகில் பந்தள மன்னனுக்கு மகனாக வளர்ந்து பன்னிரண்டு ஆண்டு காலம் ஆதிக்கம் செலுத்தி மஹிஷமுகிக்கு முக்தி அளித்தல் வேண்டும். உன்னால் பூவுலகில் அஞ்ஞான இருள் விலகி மெய்ஞான ஒளிபரவும் பக்தி பெருகும். வைராக்கியம்ஓங்கும் நீ பதினெட்டு திருக் கோயில் குடிகொண்டு கலியுகம் முடியும் வரை பக்த கோடிகளைக் காத்தருள் வாயாக! உன்னுடைய இந்த அவதார காரணம் மங்கள கரமாகப் பூர்த்தி பெற இந்த வீர மணி மாலையை உன் மணி கண்டத்திற்கு ரஷாபந்தனமாக அணி விக்கின்றேன். என்று வீர மணிகள் கொண்ட மணி மாலையைக் கண்டத்தில் அணிவித்தார். ஐயப்பன் ஐயனின் ஆணையை நிறை வேற்ற மகிழ்ச்சியுடன் சித்தமானார். தேவர்கள் மகிழ்ந்தனர்
by hari prasanth